ராணுவ வீரரின் வீட்டுற்கு சினிமா பாணியில் சென்ற போலீஸ் - வைரலாகும் விடியோ!
தக்கலை அருகே ராணுவ வீரரின் வீட்டின் கதவை சினிமா பாணியில் பூட்ஸ் காலால் எட்டி உடைத்து உள்ளே சென்ற உதவி ஆய்வாளரின் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கூட்டமாவு பகுதியை சேர்ந்தவர் ராஜா என்ற சுரேஷ்குமார். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வருடம் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த நபருடன் அடிதடி ஏற்பட்டது. அப்போது சுரேஷ்குமார் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதில் சிறை சென்று நிபந்தனை ஜாமினில் அவர் வெளியே வந்தார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் அவர் வேலை நிமித்தமாக ஜம்மு காஷ்மீர் சென்றார். அதனால் பத்மநாபபுரம் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகவில்லை. தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவர் மீது நீதிபதி பிடிவாரண்டு பிறபித்தார். இந்தநிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு விடுமுறைக்காக கடந்த சில தினங்களுக்கு முன் வீடு திரும்பிய சுரேஷ்குமார் பிடிவாரண்டு தொடர்பாக பத்மநாபபுரம் நீதி மன்றத்தில் ஆஜராகியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சுரேஷ்குமார் வீட்டிற்கு வந்திருப்பதை அறிந்த தக்கலை சப் இன்ஸ்பெக்டர் இமானுவேல் தலைமையிலான போலீசார் சுரேஷ்குமார் வீட்டிற்கு சென்று கதவை திறக்க கூறியுள்ளனர். அப்போது, சுரேஷ்குமார் கதவை திறக்காததால் ஆத்திரமடைந்த சப்இன்ஸ்பெக்டர் இமானுவேல் சினிமா பாணியில் வீட்டு கதவை பூட்ஸ் காலால் எட்டி உதைத்து உள்ளே சென்றுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.