டெல்லி முதலமைச்சர் வீடு முன் போலீசார் குவிப்பு - கைதாகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய அமலாக்கத்துறையினர் திட்டமிட்டிருப்பதாக ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ள நிலையில், கெஜ்ரிவால் வீட்டின் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் எழுந்த புகாரின் விசாரணையில் கலால்துறை அமைச்சராக இருந்த மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அது அரசியல் நோக்கத்தில் அனுப்பப்பட்டதாகக் கூறி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் அன்றும் விசாரணைக்கு ஆஜராவதை தவிர்க்கும் வகையில் 10 நாள் தியான பயற்சிக்காக பெயர் குறிப்பிடாத இடத்துக்கு சென்றார். இதையடுத்து மீண்டும் 3வது முறையாக ஜனவரி 3-ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த முறையும் சம்மனை அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்தார்.
இதையும் படியுங்கள் : 33வது சியோல் மியூசிக் அவார்ட்ஸ் - BTS, BLACKPINK-க்கு விருது...!
இதனால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்ய திட்டமிட்டிருப்பதாக ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்து வந்த நிலையில், இன்று அவரது இல்லத்தின் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. அமலாக்கத்துறை மூலம் மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.