மதுரையில் போலீசார் என்கவுன்டர் - ஒருவர் சுட்டுக்கொலை!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் செயின் பறிப்பு விவகாரத்தில் ஒருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். தொடர்ந்து மதுரை உசிலம்பட்டி அருகே காவலர் முத்துக்குமார் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட பொன்வண்ணன் என்பவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
இந்த நிலையில் மதுரையில் சுபாஷ் சந்திர போஸ் என்பவரை போலீசார் சுட்டுக்கொலை செய்துள்ளனர். மதுரை சுற்றுச்சாலை அருகே நடந்த இந்த என்கவுன்டரில் 2 கைதிகள், 2 காவலர்கள் என 4 பேருக்கு காயமடைந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். என்கவுன்டரில் உயிரிழ்ந்த சுபாஷ் சந்திர போஸின் உடல் அங்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் அளித்த பேட்டியில், “கிளாமர் காளி என்கிற காளீஸ்வரன் கொலை வழக்கில் என்கவுண்டர் செய்யப்பட்ட சுபாஷ் சந்திர போஸிற்கு தொடர்பு உள்ளது. விமான நிலையம் அருகே நான்கு வழிச்சாலையில் காரில் சுபாஷ் சந்திர போஸ் காரில் வந்து கொண்டிருந்த போது, காவல்துறையினர் சுபாஷ் சந்திர போஸை கைது செய்ய முயற்சித்தார்கள்.
சுபாஷ் சந்திர போஸின் காரை பெருங்குடி பகுதியில் இருந்து சிந்தாமணி வரை என 10 கிலோ மீட்டர் வரை சென்று மடக்கி பிடித்து கைது செய்யப் போகும்போது, சந்திர போஸ் மறைத்து வைத்திருந்த வாளை வைத்து 2 காவலர்களை வெட்டினார். மேலும் சுபாஷ் சந்திர போஸ் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை காவல் துறைக்கு எதிராக உபயோகித்தார்.
பின்பு தற்காப்பிற்காக காவல் ஆய்வாளர், சுபாஷ் சந்திர போஸை என்கவுண்டர் செய்தார். குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் மீது சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொலைகளை தடுப்பதற்காக மாநகர காவல் துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” இவ்வாறு அவர் கூறினார்.