புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய காவலர் ஹரிதாஸ் பணியிடை நீக்கம்!
பூந்தமல்லி பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், தனது இரு சக்கர வாகனம் திருடு போனதாக ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதையடுத்து அந்த பெண்ணிடம் அங்கு பணிபுரியும் ஹரிதாஸ் என்ற காவலர், வாகனத்தை கண்டுபிடிக்க ரூ.15,000 லஞ்சம் கேட்டதோடு, அந்த பெண்ணிடம் தனிமையில் இருக்க வேண்டுமென கட்டாயப்படுத்தி தனியார் விடுதிக்கு அழைத்துள்ளார்.
அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் தனது அண்ணிடம் இது குறித்து தெரிவிக்க, அவர் காவலர் வர சொன்ன தனியார் விடுதிக்கு சென்று காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்பு இந்த சம்மபவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைக்க, விரைந்து வந்த போலீசார், ஹரிதாஸை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். காவல் உதவி ஆணையர் கனகராஜ் நடத்திய இந்த விசாரணையில் உண்மை தெரியவர, ஹரிதாஸ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட குற்றப்பிரிவு காவலர் ஹரிதாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் என்ன நடக்கிறது என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். கண்காணிக்காத அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையர் சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.