#Splendor பைக் திருடர்கள் இருவர் கைது - ஆர்டரின் பெயரில் திருடித் தருவதாக அதிர்ச்சி வாக்குமூலம்!
தென்மாவட்டங்கில் ஜல்லிக்கட்டு போட்டி, கோயில் திருவிழாக்கள் போன்ற நிகழ்வுகளின் போது Splendor பைக்குகளை குறிவைத்து திருடிவந்த திருடர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் கடந்த மாதம் 20ம் தேதி செல்லூர் பூந்தமல்லி நகர் பகுதியைச் சேர்ந்த திலிப்குமார் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். இதனிடையே, அடையாளம் தெரியாத நபர்கள் ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்றனர். இது தொடர்பாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தல்லாகுளம் காவல்துறையினர் பைக் காணாமல் போன பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காணாமல் போன பைக்கை ஹெல்மெட் அணிந்திருந்த நபர் எடுத்து செல்வது தெரியவந்துள்ளது. தொடர்ச்சியாக கோரிப்பாளையம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதே நபர் அரசு மருத்துவமனையில் மற்றொரு பைக்கையும் திருடி செல்வது சிசிடிவி காட்சிகளில் தென்பட்டது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 20 நாட்களுக்கு மேலாக தீவிர விசாரணை நடத்தி பைக் திருடர்களை தேடி வந்த தல்லாகுளம் காவல்துறையினர் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இருவரிடமும் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த குமார் மற்றும் புதுக்கோட்டை சின்னக்கண் நகர் பகுதியை சேர்ந்த பிரபு என்பது தெரியவந்தது.
இதையும் படியுங்கள் : Delhi | CRPF பள்ளி அருகே வெடிப்புச் சம்பவம் - காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை!
மேலும், மதுரை ,சிவகங்கை ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கள்ளழகர் சித்திரை திருவிழா, கோரிப்பாளையம் சந்தனக்கூடு திருவிழா போன்ற கூட்டமாக இருக்கும் நிகழ்வுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை திருடிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சில மெக்கானிகளுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் ஆர்டர் செய்யும் உபகரணங்களை திருட்டுப் பைக்குகளில் இருந்து எடுத்துக் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இருவரும் தென் மாவட்ட முழுவதிலும் ஏராளமான பைக்குகளை திருடியது தெரியவந்த நிலையில் இருவர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரிடமிருந்து 21 பைக்குகளை தல்லாகுளம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இருவரும் ஹீரோ ஹோண்டா SPLENDER பைக்குகளை குறிவைத்து அதிக அளவிற்கு திருடி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
பைக் திருடர்கள் இருவரையும் கைது செய்த தல்லாகுளம் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உசிலம்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும் மதுரை மாநகர் பகுதிகளில் பைக் திருடிய இருவரும் குழுக்களாக செயல்பட்டு பைக்குகளை திருடி வந்தார்களா? என்பது குறித்தும் தல்லாகுளம் காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.