"பிரதமர் மோடியின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தான் உள்ளது" - ராகுல் காந்தி விமர்சனம்!
பிரதமர் நரேந்திர மோடியின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தான் உள்ளது என மும்பை பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்தார்.
நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைபயணமான ‘இந்திய நீதி பயணம்’ கடந்த ஜன. 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. நாட்டின் கிழக்குப் பகுதியில் தொடங்கி 63 நாட்கள் நடைபெற்ற இந்த பயணம் 14 மாநிலங்களை கடந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிறைவுற்றதாக காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : சாம்பியன் பட்டம் வென்ற RCB மகளிர் அணி | வீடியோ காலில் வாழ்த்து சொன்ன விராட் கோலி!
இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின் நிறைவையொட்டி, மும்பை சிவாஜி பூங்காவில் நேற்று கூட்டணி கட்சிகளுடனான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சரத்பவார், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே, தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா கூட்டணியின் முதல் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் என்பதால் இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் நிறைவு விழாவில் பேசிய ராகுல் காந்தி பேசியதாவது:
"நாம் ஒரு அரசியல் கட்சிக்கு எதிராகத்தான போராடுகிறோம் என்று எல்லோரும் கூறுகிறார்கள். அது உண்மையல்ல; இந்து தர்மத்தில் ஒரு அதிகார மையம் உள்ளது, அதற்கு எதிராகத்தான் போராடுகிறோம். ஊடகங்களும், சமூக ஊடகங்களும் தற்போது நாட்டின் கைகளில் இல்லை. வேலைவாய்ப்பின்மை, கலவரம், பணவீக்கம், விவசாயிகள் பிரச்னை என அனைத்தும் மறைக்கப்படுகிறது.
நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கவனத்தைப் பெற 4,000 கிலோமீட்டர் தூரம் நடந்தோம்.
பிரதமர் மோடியின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தான் உள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் போன்று, அமலாக்கத் துறை, புலனாய்வுத் துறை, வருமான வரித் துறையில் மோடியின் ஆன்மா உள்ளது"
இவ்வாறு இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் நிறைவு விழாவில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசினார்.