"பிரதமர் மோடி இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரப் பார்க்கிறார்" - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு!
"பிரதமர் மோடி இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரப் பார்க்கிறார்" என தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டியுள்ளார்.
இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49), கடந்த மே 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு (58) நடைபெற்றது. இதையடுத்து, 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெறுகின்றன. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாபில் தலா 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், இமாச்சலப் பிரதேசத்தில் 4 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3 தொகுதிகள் மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகரில் ஒரு தொகுதியிலும் மக்களவைத் தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 904 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
இந்த நிலையில் பீகார் முன்னாள் துணை முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் பிரதமர் மோடி குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது..
“ 75% இடஒதுக்கீடு உள்ள ஒரே ஒரு பாஜக ஆளும் மாநிலத்தின் பெயரை யாராவது கூறுங்கள் பார்க்கலாம். பீகாரில் உள்ள மக்கள் அரசியலைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள். இங்குள்ள மக்களை நீங்கள் முட்டாளாக்க முடியாது. இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் மோடி முயற்சி செய்து வருகிறார். நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, பீகாரில் 75% இடஒதுக்கீடு கொடுத்தோம்
இடஒதுக்கீடு குறித்த மண்டல் கமிஷன் முன்வைத்த பரிந்துரைகளை பிரதமர் மோடி எதிர்த்தார். பிரதமர் மோடி, லால் கிருஷ்ண அத்வானியுடன் சேர்ந்து, மண்டல் கமிஷனை எதிர்த்தார். இடஒதுக்கீட்டை எதிர்ப்பது அவரது நாடி நரம்புகளில் உள்ளது” என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.