பிரதமர் நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்!
தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடி அவதூறாக பேசியதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.
இந்தியாவின் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனையொட்டி கடந்த வாரம் காங்கிரஸ் தலைமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றன. இந்நிலையில் ராஜஸ்தானின் அஜ்மீரில் நடந்த பாஜக பேரணியில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ள விஷயங்கள் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்து முஸ்லிம் லீக்கின் சிந்தனைகளை ஒத்திருப்பதாக விமர்சித்தார். பிரதமர் மோடி இவ்வாறு பேசியதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் அறிக்கை போல் இருப்பதாக மோடி கூறிய விமர்சனத்திற்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், முகுல் வாஸ்னிக், பவன் கெரா உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில்,
”பிரதமரின் பேச்சுகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாக உள்ளது. முஸ்லீம் லீக் கட்சியை தங்களது தேர்தல் அறிக்கையுடன் ஒப்பிட்டு மோடி பரப்புரையில் ஈடுபடுகிறார். மத அரசியலை முன் வைத்து நாட்டில் பிளவுவாதத்தை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசி வருகிறார். இவ்வாறு மோடி பிரச்சாரம் செய்வதை தடுக்க வேண்டும்,” இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “என் சகாக்கள் சல்மான் குர்ஷித், முகுல் வாஸ்னிக், பவன்கேரா மற்றும் குர்தீப் சப்பல், பிரதமர் மீது 6 புகார்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளனர். அனைத்துக் கட்சிகளுக்கும் சமநிலையை உறுதி செய்வதன் மூலம் தேர்தல் ஆணையம் தனது சுதந்திரத்தை நிரூபிக்க வேண்டிய நேரம் இது.
My colleagues @salman7khurshid, @MukulWasnik, @Pawankhera and @gurdeepsappal have just met with the Election Commission and presented and argued 6 complaints, including 2 against the PM himself.
This is the time for the Election Commission to demonstrate its independence by… pic.twitter.com/LqKbOdyvLS
— Jairam Ramesh (@Jairam_Ramesh) April 8, 2024
தேர்தல் ஆணையம் அதன் அரசியலமைப்பு ஆணையை நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கையில் நாங்கள் உள்ளோம். எங்கள் பங்கிற்கு, இந்த ஆட்சியை அம்பலப்படுத்த அரசியல் மற்றும் சட்டரீதியான அனைத்து வழிகளையும் நாங்கள் தொடர்வோம்” என பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி ராணுவத்தை பயன்படுத்தி வருகிறார் என்றும் டெல்லி பல்கலைக்கழகத்தில் பிரதமருக்கு ஆதரவாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது என்றும் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.