பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து குறித்தும் பேசியிக்கலாம் .., - பரூக் அப்துல்லா.!
பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஜிஎஸ்டி வரிக் குறைப்பினால் கிடைக்ககூடிய நன்மைகளை பற்றி பேசினார். இதனை தொடர்ந்து எதிர்கட்சிகள் பிரதமரின் உரையில் புதிதாக எதுவும் இல்லை என்று விமர்சித்திருந்தன.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டு (NC) தலைவர் பரூக் அப்துல்லா பிரதமரின் பேச்சு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். ஸ்ரீ நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” நீங்கள் ஜிஎஸ்டி குறித்துபேசுகிறீர்கள். அதேவேளையில், ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து குறித்தும் நீங்கள் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மாநில அந்தஸ்து திரும்ப வழங்கப்படும் என்று ஜம்மு - காஷ்மீரின் ஒவ்வொரு குடிமகனும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்” என்றார்.
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ, கடந்த 2019ல் மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. இதனை தொடர்ந்து அம்மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதில், சட்ட சபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு - காஷ்மீர் பிரிக்கப்பட்டது.
இதற்கு எதிரான வழக்கில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், ஜம்மு - காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்க அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து காஷ்மீரக தலைவர்கள் மாநில அந்தஸ்து கோரி வலியுறுத்தி வருகின்றனர்.