தென் மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்த திட்டம்... பகுஜன் சமாஜ் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
பகுஜன் சமாஜ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மாயாவதி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் சில முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சியை வலுப்படுத்துவதோடு வெகுஜன மக்கள் உடனான தொடர்பை அதிகரிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கில் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தென்னிந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சியின் அமைப்பு ரீதியிலான பணிகளை வலுப்படுத்துவது மற்றும் வெகுஜன மக்கள் உடனான தொடர்பை அதிகரிப்பது போன்றவற்றில் ஆழமான பணியை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறு சீரமைப்பு, புதிய கல்விக் கொள்கை, மொழி திணிப்பு போன்றவற்றில் மத்திய அரசிற்கும் மாநிலத்திற்கும் இடையிலான பிரச்சனையை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், அரசியலமைப்பின்படி ஆட்சி நடத்துவதே நல்லாட்சி எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் குறிப்பாக ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட ஏழைகள், தலித் சமுதாய மக்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த குழந்தைகள் ஆங்கில கல்வியறிவை பெறாமலே வளர்ந்து வரும் துறைகளில் எவ்வாறு முன்னேற முடியும்? என்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இக்கால கட்டத்தில் மொழி மீதான வெறுப்பு நியாயமற்றது எனவும் மாயாவதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகப் பிரிவில் சமீபகாலமாக உட்கட்சி மோதல் அதிகரித்து வரும் நிலையில், தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் மாயாவதி பேசியுள்ளது கூடுதல் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.