For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆம்ஸ்ட்ராங் உடலை பொத்தூரில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

03:09 PM Jul 07, 2024 IST | Web Editor
ஆம்ஸ்ட்ராங் உடலை பொத்தூரில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
Advertisement

ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் உள்ள நிலத்தில் அடக்கம் செய்து கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.பவானி சுப்பராயன் தெரிவித்துள்ளார்.

Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள கட்சியின் அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் நேற்று (ஜூலை 6) மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான கோரிக்கை மனு ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியும் வழக்கறிஞருமான பொற்கொடி தரப்பில் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் அளிக்கப்பட்டது. மாநகராட்சி ஆணையர் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இந்த கோரிக்கை தொடர்பாக அவசரமாக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொற்கொடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி(பொ) அரங்க.மகாதேவனிடம் முறையிடப்பட்டது. இந்த மனுவை தனி நீதிபதி ஒருவர் விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று (ஜூலை 7) காலை காணொலி மூலம் நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, "மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில்தான் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்க செய்ய முடியும். சட்டப்படி குடியிருப்புப் பகுதிகளில் அடக்கம் செய்ய முடியாது. ஆம்ஸ்ட்ராங்கின் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது. 2,400 சதுர அடி நிலத்தை அரசு வழங்குகிறது அல்லவா? வேறு பெரிய இடம் இருந்தால் சொல்லுங்கள் உத்தரவிடுகிறேன்" என்று தெரிவித்து இவ்வழக்கின் விசாரணையை இன்று (ஜூலை 7) காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தார்.

இதனைத் தொடர்ந்து, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வி.பவானி சுப்பராயன், "ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய மனுதாரர் தெரிவிக்கும் புதிய இடமும் குடியிருப்பு பகுதியாகும், ஆம்ஸ்ட்ராங் உடலை அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்வது நல்லது, நாளை பள்ளிகள் திறக்கவுள்ளதால் இன்றே உடலை அடக்கம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்து வழக்கின் விசாரணையை பிற்பகல் 2.15 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதைத் தொடர்ந்து, இவ்வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. பவானி சுப்பராயன் வழங்கினார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகேயுள்ள பொத்தூரில் அடக்கம் செய்துகொள்ளலாம். போதுமான காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம் அமைத்துக் கொள்ளலாம். கட்சி அலுவலகத்தில் நினைவு மண்டபம் அமைக்க எவ்வித பிரச்னையும் இல்லை. கண்ணியமான முறையில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய வேண்டும். அரசு மரியாதை வழங்கக்கோரிய விண்ணப்பம் மீது தமிழக அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement