”ஜனநாயகக் கடமையாற்றுவதில் அரசியல் கட்சிகளின் குரல்வளையை நெறிக்க கூடாது” - அன்புமணி ராமதாஸ்..!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் நாள் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கரூர் நெரிசல் உயிரிழப்புகளுக்கான காரணம் குறித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிறப்பித்த இடைக்காலத் தீர்ப்பில், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பொதுக்கூட்டங்களை நடத்த எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்று இடைக்கால ஆணை பிறப்பிக்கிறோம்.
பொதுக்கூட்டங்களை நடத்துவதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது. ஏதேனும் பகுதிகளில் பொதுக்கூட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் இல்லாத பட்சத்தில், அதற்கான இடத்தை சம்பந்தப்பட்ட தேர்வு செய்து தரும்படி சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளை அதிகாரிகள் கேட்டுக்கொள்ள வேண்டும்; அவ்வாறு அவை தேர்வு செய்து தரும் இடம் பாதுகாப்பானதாகவும், அவசர ஊர்தி உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்லும் வசதி கொண்டதாகவும் இருக்கும்பட்சத்தில் அங்கு கூட்டங்களை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதிக்கலாம் என்று கூறியுள்ளது. இதை சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வும் உறுதி செய்திருக்கிறது.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் இந்த இடைக்கால ஆணையைத் தொடர்ந்து மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் நான் மேற்கொள்ளவிருந்த தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது; பொதுக்கூட்டங்களை மட்டும் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்க காவல்துறை மறுக்கிறது. பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான விதிகள் வகுக்கப்படும் வரை தங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று காவல்துறை தட்டிக் கழிக்கிறது. இது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற விடாமல் அரசியல் கட்சிகளின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும்.
இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 190(ஏ), 19(1)(பி) ஆகிய பிரிவுகளின்படி வழங்கப்பட்டுள்ள பேச்சு உரிமை, கருத்துரிமை, அமைதியாக ஓரிடத்தில் ஒன்று கூடும் உரிமை ஆகியவற்றை பறிக்கும் செயலாகும். ஆட்சியாளர்களின் தவறுகளை எடுத்துக் கூறுவதும், நாட்டு நிலைமை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் அரசியல் கட்சிகளின் கடமை ஆகும். போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், பேரணிகள், நடைபயணங்கள், துண்டுபிரசுரங்களை வழங்குதல் ஆகிய நிகழ்வுகளின் மூலம் தான் இவற்றை செய்ய முடியும்.
எந்த ஒரு சூழலையும் சமாளிக்க இடைக்கால ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இன்றைய சூழலை சமாளிக்கவும் இடைக்கால ஏற்பாடு தேவை. எனவே, பொதுக்கூட்டங்களுக்கான பாதுகாப்பு விதிகள் வகுக்கப்படும் வரை மக்கள் கூடும் இடங்களில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், நடைபயணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள இடைக்கால அனுமதியை அரசு அளிக்க வேண்டும். அதற்காக அரசின் சார்பில் விதிக்கப்படும் நியாயமான நிபந்தனைகளை அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டும் பொறுப்புடன் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்”
என்று தெரிவித்துள்ளார்.