”பெரியாரும், அம்பேத்கரும் ஒரே திசையில் சிந்தித்தவர்கள்” - திருமாவளவன்!
சென்னை தியாகராயர் நகரில் உள்ள தியாகராயர் அரங்கத்தில் 76 -ஆவது குடியரசு தினத்தையொட்டி, தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் பேரவையின் சார்பில் “இந்திய குடியரசும் - டாக்டர் அம்பேத்கரும்” என்ற தலைப்பில் கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், சுதா மற்றும் சமூக செயல்பாட்டாளரும், அம்பேத்கரின் பேரனுமான ஆனந்த் டெல்டும்டே, ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் அம்பேத்கரை குடியரசு தந்தை என அழைக்க வேண்டும், உச்ச நீதிமன்ற கிளை தமிழ்நாட்டில் அமைக்கப்பட வேண்டும், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் இட ஒதுக்கீடை பின்பற்ற வேண்டும் போன்ற மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன்,
“அம்பேத்கர் பற்றி அனைத்து தரப்பினரும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். அதனை நாம் பார்க்கிறோம். குறிப்பாக கம்யூனிஸ்டு இயக்கங்கள் அம்பேத்கரை படிப்பதும், மக்கள் மத்தியில் கொண்டு செல்வதாக செயல்பட்டு வருகின்றன. தீய சக்திகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகளை அணி திரட்டுவதற்கு ஒரு களமாக
கம்யூனிஸ்டு இயக்கங்களின் களம் அமைந்திருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் பற்றிய விவாதங்கள் என்பது தலித் மக்கள் வட்டத்திற்குள்ளேயே சுருங்கி இருந்தது. அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அம்பேத்கரை ஆழமாக படித்ததோ, விவாதித்ததோ இல்லை. 1990க்கு பிறகு அவருடைய நூற்றாண்டிற்கு பிறகு தான் கவனிக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில் தான் கம்யூனிஸ்ட் இயக்கங்களும் படிக்கவும் பேசவும் தொடங்கினர். அதற்கு முன்பு வரை ஒரு குறிப்பிட்ட சாதியின் தலைவராக அம்பேத்கர் பார்க்கப்பட்டார். ஒரு சாதி சங்க தலைவராக பார்க்கப்பட்டார்.
அவருக்கு தேசப்பற்று இல்லை. அவர் தேசிய போராட்டங்களில் பங்கேற்கவில்லை.
பிரிட்டிஷ்காரர்களை எதிர்க்கவில்லை, காந்தியடிகளை போல் போராட்ட களத்தில்
கலந்துகொணடு சிறைச்செல்லவில்லை, ஆகவே அவரை எப்படி ஒரு தேசத் தலைவராக தேசத் தந்தையாக ஏற்க முடியும் என்ற கருத்து இருந்தது.
1990 ஆண்டுகளுக்குப் பிறகு அம்பேத்கார் மீது உள்ள பார்வை மாறியிருக்கிறது.
அவர் எந்த அளவிற்கு புரட்சிகரமானவர், தொலைநோக்குப் பார்வை உள்ளவர், ஆழமான அறிவாற்றலைக் கொண்டவர் என்பது அனைத்து தரப்பினராலும்
உள்வாங்கப்பட்டிருக்கிறது.
இங்கு நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று தீர்மானங்களில் முக்கிய தீர்மானம், புரட்சியாளர் அம்பேத்கரை இந்திய குடியரசு தந்தை என்று அழைப்பது. அவரை எந்த அளவிற்கு முற்போக்கு சிந்தனையாளர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை இதன் மூலம் உணர முடிகிறது. இந்த மூன்று தீர்மானங்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆதரிப்பதில் கடமைப்பட்டிருக்கிறேன்.
இரண்டாவது தீர்மானம் உச்ச நீதிமன்ற கிளை தமிழ்நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். மூன்றாவது தீர்மானம் உச்ச நீதிமன்ற, உயர் மன்ற நீதிபதி நியமனத்தில் இட ஒதுக்கீட்டின் அடிப்படை பின்பற்ற வேண்டும் என்ற தீர்மானம்.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் ஏன் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தப்படவில்லை? இவற்றில் ஏன் இன்னும் ஆதிக்கத்தை சேர்ந்தோர் நீதிபதிகளாக இடம்பெறும் சூழல் இருக்கிறது?, நியமிக்கப்படும் நீதிபதிகளில் எத்தனை பேர் ஓபிசி சமூகத்தை சார்ந்தவர்கள், எத்தனை பேர் தலித் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தோர்? ஒன்று, இரண்டு என்று விரல் விட்டு எண்ணக்கூடிய நிலைதான்.
நாடு குடியரசு அடைந்து 76 ஆண்டுகள் ஆகிவிட்டது. முக்கால் நூற்றாண்டை கடந்தும் ஏன் இவற்றை நம்மால் சரி செய்ய முடியவில்லை. உச்ச நீதிமன்ற உயர் நீதிமன்றத்தில் நீதிபதியை நியமிக்க முடியாமல் எது தடுக்கிறது, ஏன் நீடிக்கிறது?. இன்னும் இந்த நாட்டை மனுஸ்மிருதி தான் ஆண்டு கொண்டிருக்கிறது. வர்ணம் தான் அவர்களது அரசியலமைப்பு சட்டம்.
அம்பேத்கரால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு சட்டம் தேர்தல் காலங்களில்
பயன்படுகிறதே தவிர, பண்பாட்டுத்தலங்களில், நிர்வாகத் தலங்களில்
பயன்படுத்தப்படுபவையாக கொண்டுவரப்படவில்லை, பயன்படுத்தவில்லை. கான்ஸ்டிடியூஷன் ஆஃப் இந்தியா என்பது அனைத்து தலங்களிலும் பயன்பாட்டிற்கு வந்துள்ளதா என்று கேட்டால் இல்லை.
அரசியல் தளத்தில் குறிப்பாக தேர்தல் தளங்களில் நடைமுறையில்
உள்ளது. நிர்வாக தலங்களில் குறிப்பாக உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் போன்ற அதிகார தலங்களில் இச்சட்டம் நடைமுறையில் இல்லை. ஆகவே இந்த அரசியலமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கே நாம் போராட வேண்டியது உள்ளது. போராடுவதற்கு நமக்கு புரிதல் தேவைப்படுகிறது.
அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்கிறது என்பதை தெரிந்துகொள்ள முதலில் இருக்கக்கூடிய பத்து வரிகளை படித்தால் போதுமானது. இந்தியாவை தேசமாக கட்டமைப்பதற்கு அடிப்படையில் ஒரு கொள்கை அறிக்கை தேவைப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் தோன்றினார். 200 ஆண்டுகளுக்கு முன்னர் காரல் மார்க்ஸ் தோன்றினார் . புத்தீசமும், மார்க்சிசமும் வெவ்வேறு காலங்களில் தோன்றினால் கூட, அடிப்படையில் மனித குலத்தில் விடுதலையை
முன்வைக்கும் கொள்கைகள்தான் கோட்பாடுகள் தான்.
பௌத்தம் என்று ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் சுதந்திரம், சமத்துவம்,
சகோதரத்துவம். மார்க்சியம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதுதான்.எதுவும் நிலையானது அல்ல என கௌதம புத்தர் கூறுகிறார். இதையேதான் மார்க்சியமும் கூறுகிறது. எல்லாம் மாறிக்கொண்டே இருக்கும். இன்பம் நிலையானது அல்ல, அதுபோல துன்பமும் நிலையானது அல்ல.
சனாதனம் என்பதற்கு பொருள் நிலையானது மாறாதது. புத்திசத்திற்கும்
மார்க்சியத்திற்கும் முற்றிலும் எதிரானது சனாதனம். ஆதிக்கம், சுரண்டல், ஒடுக்கு முறை எந்த வடிவத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான கருத்து கொண்ட சனாதன சக்திகள் ஆட்சி பீடத்தில் இருக்கிறார்கள்.
அவர்கள் தமிழ்நாட்டிலும் வேர் ஊன்ற பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் வேறு ஊன்றுவதற்கு சிலர் அடித்தளம் அமைத்து தருகிறார்கள். அதற்காக சிலர் பெரியாரைக் கொச்சைப்படுத்துகிறார்கள். பெரியாரை விமர்சிக்கிறார்கள். பெரியாரும், அம்பேத்கரும் ஒரே திசையில் சிந்தித்தவர்கள். ஒரே களத்தில் செயல்பட்டவர்கள், ஒரே இலக்கை நோக்கி பயணித்தவர்கள். அந்த ஒற்றை
இலக்கு சமத்துவம்” எனப் பேசினார்.