“மக்கள் நேர்மறையான அரசியலை விரும்புகின்றனர்; தவறாக வழிநடத்தும் அரசியல் நாட்டுக்கு பயன்தராது” -பிரியங்கா காந்தி கருத்து!
மக்கள் நேர்மறையான அரசியலை விரும்புகின்றனர் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
பிஹார், மேற்கு வங்கம், தமிழகம், மத்திய பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில், மேற்கு வங்கம், உத்தராகண்ட், பிஹாரின் சில இடங்களைத் தவிர அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் ஆணையத்தின் தகவல்படி தமிழகத்தின் விக்கிரவாண்டியில் அதிக அளவிலும், உத்தராகண்டின் பத்ரிநாத்தில் குறைந்த அளவிலும் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டன.
2024 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடந்த இந்த முதல் இடைத்தேர்தல்களில் என்டிஏ-வுக்கும், இண்டியா கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவியது. இன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், காலை முதலே பெரும்பாலான தொகுதிகளில் இண்டியா கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. இந்த நிலையில், இடைத்தேர்தல் நடந்த மொத்தம் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 10 இடங்களை இண்டியா கூட்டணி கைப்பற்றியுள்ளது. என்டிஏ 2 இடங்களில் வென்றுள்ளது. ஓர் இடத்தில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், மக்கள் நேர்மறையான அரசியலை விரும்புகின்றனர்; தவறாக வழிநடத்தும் அரசியல் நாட்டுக்கு பயன்தராது என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.