மதுரை | டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு - ஒரு லட்சம் மக்களுடன் நடைபயண பேரணி நடத்த திட்டம்!
மேலூர் பகுதிகளில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மேலூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், வணிகர்கள், மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
மேலூர் பகுதிகளில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான வழங்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும், இல்லையெனில் அதுவரை தங்களுடைய போராட்டம் தொடரும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர். அரிட்டாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 48 கிராமங்களை பாதுகாக்க வேளாண் தொல்லியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி, வரும் ஜனவரி மாதம், மேலூர் அருகே உள்ள நரசிங்கம்பட்டி பெருமாள் மலையில் இருந்து, ஒரு லட்சம் மக்களுடன் நடைபயண பேரணியாக மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள மத்திய அரசு அலுவலகமான தலைமை தபால் நிலைய அலுவலகம் மற்றும் தகவல்தொடர்பு (பிஎஸ்என்எல்) அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக முடிவெடுக்கப்பட்டது.
அன்றைய தினம் மேலூர் பகுதி முழுவதும், இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடையடைப்பு போராட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது. மேலும், தங்களுடைய போராட்டத்திற்கு ஆதரவாக மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்ட வணிகர் சங்கங்களும் கலந்துக் கொள்ள வேண்டுகோள் விடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.