“2019-ம் ஆண்டு செய்த தவறை தமிழ்நாடு மக்கள் மீண்டும் செய்யப்போவதில்லை” - அண்ணாமலை பேச்சு!
2019-ம் ஆண்டு செய்த தவறை தமிழ்நாடு மக்கள் மீண்டும் செய்யப்போவதில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் பகுதியில் நடைபெற்ற பாஜகவின் “என் மண் என் மக்கள்” யாத்திரை நிறைவு விழா மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் கூட்டணி கட்சித் தலைவர்களான ஜி.கே.வாசன், பாரிவேந்தர், ஜான்பாண்டியன், தேவநாதன் யாதவ், ஏசி சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த முக்கிய நிகழ்வில் பாரத பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை,
“இன்னும் 60 நாள்களில், 400 இடங்களுடன் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளார். அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி 39 எம்பிக்களை அமர்த்தி அழகு பார்க்கும். அதுவரை நமக்கு ஓய்வென்பது கிடையாது. நம் பணி இன்னும் 60 நாட்கள் இருக்கிறது. பத்து ஆண்டுகள் கழித்து திரும்பி பார்க்கும் பொழுது தமிழ்நாட்டின் மாற்றம் பல்லடத்தில் நிகழ்ந்ததாகவே சரித்திரம் இருக்கும். கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் செய்த தவறை தமிழ்நாடு மக்கள் இனியும் செய்யப்போவதில்லை” என தெரிவித்தார்.