மக்களவைத் தேர்தல் 2024: திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ!
திமுக தலைமையிலான கூட்டணியில், மதிமுக-வுக்கு ஒதுக்கப்பட்ட திருச்சி தொகுதியின் வேட்பாளராக துரை வைகோ அறிவிக்கப்பட்டுள்ளார்.
மக்களவை தேர்தல் தேதி நேற்று முன்தினம் (மார்ச் 16) அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் (மார்ச் 20) முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. இதனால் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.
அந்த வகையில் தமிழ்நாட்டில் திமுக படுவேகமாக உள்ளது. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை உறுதி செய்துவிட்ட நிலையில், அதனைத்தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி மற்றும் திமுக சார்பில் போட்டியிடும் தொகுதிகளையும் இறுதி செய்து அதன் அறிவிப்பையும் வெளியிட்டது.
தமிழகத்தில் 21 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விசிகவுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தை திமுக கட்சி ஒதுக்கியுள்ளது. இதேபோல் சிபிஐக்கு 2 தொகுதிகளும், சிபிஎம் கட்சிக்கு 2 தொகுதிகளும், மதிமுகவிற்கு ஒரு தொகுதியும், இயூமுலீக்குக்கு ராமநாதபுரம் தொகுதியையும், கொமதேக நாமக்கல் தொகுதியையும் ஒதுக்கியுள்ளது.
அந்த வகையில், மதிமுக கட்சிக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தொகுதியின் வேட்பாளராக துரை வைகோ அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள மதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.