சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பப்பு யாதவ் மீண்டும் காங்கிரசில் இணைந்தார்!
மக்களவைத் தேர்தலில் பீகாரின் பூர்னியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பப்பு யாதவ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
பீகாரில் உள்ள பூர்னியா மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட முன்னாள் எம்பி ராஜேஷ் ரஞ்சன் என்கிற பப்பு யாதவ் 23,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பப்பு யாதவ் தேர்தலுக்கு முன்பு தனது ஜன் அதிகார் கட்சியை (ஜேஏபி) காங்கிரஸுடன் இணைத்தார்.
ஆனால் அவருக்கு பூர்னியா தொகுதியை லாலுகட்சி ஒதுக்காததால் அதே தொகுதியில் சுயேட்சையாக பப்புயாதவ் களம் இறங்கினார். ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் சந்தோஷ்குமாரை விட பப்புயாதவ் 23 ஆயிரம் 847 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் 4-வது முறையாக அந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
இதையும் படியுங்கள் : மீண்டும் சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரானார் நிதின் கட்காரி!
இந்நிலையில் இன்று மாலை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை பப்பு யாதவ் சந்தித்ததாக தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்தியா மற்றும் பீகாரின் வளர்ச்சி குறித்தும், அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்த பப்பு யாதவ் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக மகாராஷ்டிராவில் வெற்றி பெற்ற ஒரு சுயேச்சை வேட்பாளரான விஷால் பாட்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து பப்புயாதவ் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.