”இந்தியவில் நடைபெறும் ஆசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்பது கடினம்” என பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ளதாக தகவல்
இந்தியாவில் அடுத்த மாதம் ஆசிய ஹாக்கி கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனமானது, ”இந்தியவில் நடைபெறும் ஆசிய ஹாக்கி கோப்பை போட்டிக்கு தங்கள் அணியை அனுப்புவது கடினம்” என்று சர்வதேச ஹாக்கி சம்மேளனத்திடம் தெரிவித்துள்ளதக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத்தின் தலைவரான தாரிக் புக்தி, பாகிஸ்தான் அணியை இந்தியாவிற்கு அனுப்புவது குறித்து தங்கள் ஆட்சேபனைகளை தெரிவித்து, சர்வதேச ஹாக்கி சம்மேளனம் மற்றும் ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு (AHF)-க்கு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறினார்.
மேலும் அவர், "எங்கள் வீரர்கள் ஆசியக் கோப்பைக்காக இந்தியாவுக்குச் செல்ல ஆர்வமில்லை என்று நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்துள்ளோம், எங்கள் வீரர்கள் இந்தியாவில் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதற்கும், போட்டிகளில் கவனம் செலுத்த முடியும் என்பதற்கும் என்ன உத்தரவாதம் உள்ளது என்பதை எங்களுக்குத் தெரிவிக்குமாறு நாங்கள் அவர்களிடம் கேட்டுள்ளோம்," என்றும் தெரித்துள்ளார்.
மேலும் அவர், "தற்போதுள்ள சூழ்நிலையில், எங்கள் அணி இந்தியாவில் விளையாடும்போது பாதுகாப்பு அபாயங்களை எதிர்கொள்ளும் என்று நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்துள்ளோம்," என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லை தாண்டிய பதட்டங்கள் ஏற்பட்டன. இதன் விளைவாக ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் தொடர் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் சமீபத்தில், இந்தியா – பாகிஸ்தான் லெஜண்ட்ஸ் போட்டியும் ரத்தானது குறிப்பிடத்தக்கது.