வங்கதேசத்தில் பிப். 12-ல் பொதுத் தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக எழுந்த பெரும் போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பல ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். தொடர் போராட்டங்கள் காரணமாக பிரதமா் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். தொடர்ந்து வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளார்.
வங்கதேச வன்முறை தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையில் ஷேக் ஹசீனா மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுள்ளார் எனக் கூறி அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் தனக்கு எதிரான தீர்ப்பு ஒரு தலைபட்சமானது என்று ஹேக் ஹசீனா விமர்சித்திருந்தார். இந்தியாவில் தஞ்சமடந்துள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்த கோரி இந்தியாவிற்கு வங்காள தேசம் கோரிக்கை விடுத்தது. அக்கோரிக்கை ஆராயப்பட்டு வருவதாக இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த சூழலில் வங்காள தேசத்தின் 13-வது தேசிய நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டு தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) நசிருதீன் அறிவித்துள்ளார். மேலும் அவர் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மற்றும் ஜூலை சாசன (July Charter) வாக்குப்பதிவு ஆகிய இரண்டும் பிப்ரவரி 12-ஆம் தேதி ஒரே நேரத்தில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரின் அறிவிப்பின் படி, வங்கதேசம் முழுவதும் உள்ள 300 நாடாளுமன்றத் தொகுதிகளிலுக்கும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் டிசம்பர் 29 ஆம் தேதிக்குள் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். தேர்தலில் இருந்து வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி ஜனவரி 20 ஆகும்.