"எங்களுக்கு முதன்மை எதிரி திமுக தான்" - அண்ணாமலை பேட்டி!
கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "இருமல் மருந்து விவகாரத்தில் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள மருந்து நிறுவனம் நாடு முழுவதும் மருந்துகளை அனுப்பி வருகிறது. இது குறித்து விசாரணை செய்ய குழு வருகிறது. நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவோம்.
கரூர் சம்பவம் தொடர்பாக நீதி அரசர்கள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. விசாரணை நடக்கும் போது நீதி அரசராக இருந்தால் கூட கருத்துகளை சொல்வது ஏற்புடையது அல்ல. தமிழ்நாட்டில் மட்டும் தான் மத்திய அரசை எதிரியாக பார்க்கிறார்கள். ஆளுநர் கேட்கும் கேள்வி சரிதான்.
முகாமைச்சர் தொடர்ந்து ஆளுநரை சீண்டி பார்ப்பது சரியல்ல. கரூர் விவகாரத்தில் விஜய் மீது வழக்கு தொடர்ந்தால் நிற்காது. விஜய்யை குற்றவாளியாக மாற்ற முடியாது. அரசியல் ஆசைக்கு வேண்டுமானால் ஓரிரு நாள் கைது செய்யலாம். இதேபோல் திருமாவளவன் அவர்களுக்கு நடந்திருந்தாலும் இதையே தான் சொல்வேன்.
தமிழக வெற்றிக் கழகம் மீது ஒருசில தவறுகள் உள்ளது. அதற்காக விஜய்யை கைது செய்ய முடியாது. என் பெயரை சொல்லி பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் தொடர்பாக நான் புகார் அளித்துள்ளேன். பாதிக்கப்பட்டவர்களிடம் என் பெயரை பயன்படுத்தியதால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மத்திய அரசு நிதி ஒதுக்கி இருந்தாலும் கோவையில் 10 கிலோ மீட்டர் மேம்பாலத்தை முதலமைச்சர் திறப்பது மகிழ்ச்சி தான்.
நாட்டில் மக்கள் எங்கு பாதிப்பபட்டாலும் பாஜக குழு செல்லும் உரிமை உள்ளது. இதற்கு முதலமைச்சர் ஏன் பயப்படுகிறார். அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கும் மக்களை சந்திக்க உரிமை உள்ளது. எங்கள் மாநில தலைவர் யாத்திரையில் கூட பகுதிகளுக்கு செல்ல குழப்பம் உள்ளது. இதற்கு முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்வு காண வேண்டும். எங்களை பொறுத்தவரை தமிழகத்தில் திமுகவை வீழ்த்த வேண்டும். எங்களுக்கு முதன்மை எதிரி திமுக. பாஜகவிற்குள் எந்த குழப்பமும் இல்லை. தலைவர் பதவி இல்லாததால் வேலை பளு குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.