For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!

11:10 AM Jun 21, 2024 IST | Web Editor
விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும்   எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
Advertisement

”எங்களுடைய வேலை கேள்வி கேட்பது அதை கூட செய்ய விடவில்லை” என  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.  

Advertisement

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வருகிறது.  பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. அதிமுக,  பாமக உறுப்பினர்கள் கருப்புச்சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர்.

தொடர்ந்து கூட்டத்தொடர் தொடங்கியதும் விஷச் சாராய விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.  கேள்வி நேரத்தை ஒத்தி வைக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இருக்கையில் அமருமாறு சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்தார்.  அவை முன்னவர் துரைமுருகனை பேசவிடாமல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  எதிர்க்கட்சி தலைவர் மட்டும் பேசலாம் மற்றவர்கள் அமைதி காக்க சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்.

சபாநாயகர் வேண்டுகோளை நிராகரித்து அதிமுக உறுப்பினர்கள் அமளியால் வெளியேற்ற உத்தரவிட்டார்.  சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.  அதனையடுத்து அதிமுக உறுப்பினர்களை அவைக் காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.

இதையடுத்து,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக கோரி பாதகை ஏந்தியும், தமிழ்நாடு காவல்துறையின் அராஜகம் ஒழிக என முழக்கமிட்டும் சட்டப்பேரவை நுழைவு வாயிலில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:  

எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது.  சிகிச்சை பெற்று வரும் மீதமுள்ள 16 பேரும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வந்துள்ளன.

நாட்டை உலுக்கிய கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாகச் சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவிடம் பேரவையில் விவாதிக்க அனுமதி கோரினோம்.  ஆனால்,  இது குறித்துப் பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய வேலை கேள்வி கேட்பது அதை கூட செய்ய விடவில்லை.  பேரவை தலைவர் அப்பாவு கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து எங்களைப் பேசவிடவில்லை. கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தமிழ்நாடு அரசு உரிய சிகிச்சை அளிக்கவில்லை.

கள்ளச்சாராயம் அருந்தி தான் உயிரிழந்தார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டுக் குணமடைந்திருப்பார்கள்.

அந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் எ. வ. வேலு கள்ளச்சாராயம் தொடர்பாக தகவல் கிடைத்திருந்தால் தடுத்து இருப்போம் என சொல்கிறார்.  ஆனால் எங்கள் கட்சி எம்.எல்.ஏ. செந்தில்குமார் கடந்தாண்டு மார்ச் 29-ம் தேதி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர கோரிக்கை வைத்தார் அதை ஏற்க வில்லை.

அதை கவனித்திருந்தால் இந்த சம்பவத்தை தடுத்து இருக்கலாம். திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டு கொள்ளவில்லை.  மக்களை பற்றி கவலைப்படாத கூட்டணி கட்சிகள். திமுக அரசுக்கு கூட்டணி கட்சியினர் துணை போகிறார்கள். கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags :
Advertisement