பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு எத்தனை தொகுதிகள்?
கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் உடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, நேர்காணல் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டிலும் அரசியல் கட்சிகள் மக்களவை தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில், பாஜகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனிடையே, சரத்குமார் தன்னுடைய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நேற்று பாஜகவுடன் இணைத்தார். முன்னதாக பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் பாஜக ஈடுபட்டது. இதில் பாஜக தரப்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
“தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த ஆலோசனை நடைபெற்றது. தொகுதிகள் குறித்து உறுதியான முடிவு வந்த பிறகு உங்களிடம் நான் கூறுவேன். சின்னம் சம்பந்தமாக எந்த நிர்பந்தமும், அச்சுறுத்தலும் இல்லை. கடந்த முறை போட்டியிட்ட சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளோம். கண்டிப்பாக அது கிடைக்கும். ஏற்கனவே தேர்தல் ஆணையம் ஒதுக்கிய குக்கர் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். அது மட்டுமல்லாமல் குக்கர் சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு விருப்பமும் உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 3 வது முறையாக வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கு பல்வேறு நலத்திட்டங்களை பெற்றுத்தர வேண்டும் என்று கூட்டணி அமைத்துள்ளோம். எங்களுடைய இலக்கு NDA கூட்டணிக்கு தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்று தருவது தான். அதற்காகத்தான் இணைந்துள்ளோம். உறுதியாக வெற்றி பெறுவோம்.
இதையும் படியுங்கள்: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது RCB – முதன்முறையாக ‘பிளே ஆஃப்’ சுற்றுக்கு தகுதி!
குடியுரிமை திருத்தச் சட்டம் இங்கு இருக்கக்கூடிய யாருடைய குடியுரிமையும் பறிக்கக்கூடிய சட்டம் அல்ல. வேறு நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை கொடுக்கக் கூடிய சட்டம் அது. இதனைத் தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள். பாஜக பல மாநிலங்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் வெற்றி பெறுவதன் மூலம், தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை பெற முடியும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 4 மக்களவை தொகுதிகளும், ஓபிஎஸ் அணிக்கு 4 மக்களவை தொகுதிகளும் பாஜக ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.