தாயை பிரிந்த குட்டியை சேர்க்காத மற்ற யானைக் கூட்டம் | முதுமலை முகாமுக்கு கொண்டு வந்த வன அதிகாரிகள்!
தாயை பிரிந்த 4 மாத ஆண் குட்டி யானை அதன் கூட்டத்துடன் இணையாததால் முதுமலை யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதாலும், ஆறு மற்றும் குளங்கள் வறண்டு வருவதால், வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியே வருகின்றன.
அந்த வகையில், கோயம்புத்தூர் வனக்கோட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் யானை குட்டி கூட்டத்தை விட்டு தனியாக வெளியே வந்துவிட்டது. பின்பு, பணியாளர்கள் அந்த யானை குட்டியை அருகில் இருக்கும் யானைக் கூட்டத்துடன் சேர்க்க முயற்சி செய்தனர்.
அப்போது முதலில் யானை குட்டி கூட்டத்துடன் சேர்ந்தது. ஆனால், மீண்டும் திரும்பி வந்துவிட்டது. பலமுறை முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த குட்டியின் வயது சுமார் நான்கு மாதம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தற்போது அந்த யானை குட்டியை தலைமை வன உயிரின காப்பாளரின் ஆணைப்படி, முதுமலை புலிகள் காப்பகத்தில் இருக்கும் தெப்பக்காடு யானை முகாமிற்குப் பராமரிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, ஒரு மாதத்திற்கு முன்பு பண்ணாரி வனப்பகுதியில் தாயைப் பிரிந்த பெண் குட்டி யானை ஒன்று ஆசனூரில் இருந்து இங்குக் கொண்டுவரப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.