"உச்சநீதிமன்றத்தில் கையெழுத்து போடக்கூடாது என ஓபிஎஸ் ரூ.5கோடி பேரம் பேசினார்" - தமிழ் மகன் உசேன் குற்றச்சாட்டு
உச்சநீதிமன்றத்தில் நான் கையெழுத்து போடக்கூடாது என்று என்னிடம் ஆட்களை வைத்து 5 கோடி ரூபாயை கொடுத்து ஒ.பன்னீர்செல்வம் பேரம் பேசினார் என அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை கிழக்கு ஒன்றியம் சார்பில் மறைந்த
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
வாலாஜாபேட்டை ஒன்றிய செயலாளர் பூண்டி பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார், அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தமிழ் மகன் உசேன் தெரிவித்ததாவது..
“ முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் நான் கையெழுத்து போடக்கூடாது என்று பேரம் பேசினார். அவரது ஆட்களை என் வீட்டிற்கு 5 கோடி ரூபாயுடன் அனுப்பி வைத்தார். ஆனால் பணத்தை திருப்பி எடுத்து செல்லுங்கள் என்று கூறிவிட்டேன்
இதைப்பற்றி அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவித்தேன். இதனையடுத்து தன்னை தனியாக அறை எடுத்து பாதுகாப்பாக வைத்ததார். நான் மூத்த
அரசியல்வாதி என்பதால் என்னுடைய கணிப்பு சரியாக உள்ளதால் வருகிற நாடாளுமன்ற
தேர்தலுக்கு பிறகு 8 மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் வரும். அந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்று முதல்வராவார் ” என தமிழ் மகன் உசேன் தெரிவித்தார்.