'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் - இளைஞர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு !
குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் 2,361 மாணவ- மாணவிகளுடன் தேசிய மாணவர் படை (என்சிசி) முகாம் நடைபெற்று வந்தது. இந்த முகாமின் நிறைவாக, கரியப்பா மைதானத்தில் நேற்று (ஜன.27) நடைபெற்ற வருடாந்திர என்சிசி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொன்டு பேசினார்.
அப்போது, "சுதந்திரத்துக்கு பின் நாட்டில் குறிப்பிட்ட காலம் வரை மத்திய-மாநில தேர்தல்கள் ஒன்றாகவே நடத்தப்பட்டன. காலப் போக்கில், இந்த நடைமுறை தடைபட்டு, பல்வேறு சவால்கள் உருவாகின. அவ்வப்போது நடைபெறும் தேர்தல்களால் நிர்வாகம் மற்றும் வளர்ச்சியில் இடையூறுகள் ஏற்படுகின்றன.
நாட்டில் இப்போது 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் குறித்து முக்கிய விவாதம் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் வளர்ச்சிக்கான இடையூறுகளைக் களைந்து, நிர்வாக அணுகுமுறையில் அதிக கவனம் செலுத்த முடியும்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் தெளிவாக வரையறுக்கப்பட்ட இடைவெளியில்தான் தேர்தல் நடத்தப்படுகிறது. 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்ட விவாதம், இந்தியாவின் ஜனநாயக நடைமுறைக்கும், வருங்கால அரசியலுக்கும் மிக முக்கியமானது. இளைஞர்களின் எதிர்காலத்துடன் நேரடியாக தொடர்புடைய இந்த விவாதத்தில் அவர்கள் பெருவாரியாக பங்கேற்க வேண்டும்.
குறிப்பாக தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப் பணி திட்ட (என்எஸ்எஸ்) மாணவர்கள் துடிப்புடன் பங்கேற்று, விவாதத்தை வழிநடத்த வேண்டும். இளைஞர்கள் புத்தாக்க சிந்தனையுடன் அரசியலில் ஈடுபட வேண்டும். அரசியல் பின்னணி இல்லாத 1 லட்சம் இளைஞர்கள் பொது வாழ்வில் இணைய வேண்டுமென கடந்த சுதந்திர தின உரையில் வலியுறுத்தியதை இப்போது நினைவுகூர்கிறேன். உலகின் வளர்ச்சியில் இந்திய இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது.
நமது இளைஞர்களின் பங்களிப்பின்றி உலகின் எதிர்காலம் இல்லை. எனவே, உலகின் நன்மைக்காக பணியாற்ற இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். நாட்டில் கடந்த 2014-இல் என்சிசி மாணவர்களின் எண்ணிக்கை 14 லட்சமாக இருந்தது. இப்போது 20 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மாணவிகள். நாட்டின் வளர்ச்சிக்கான உந்து சக்தி இளைஞர்களே. அவர்களின் திறமையால் தான் அனைத்து துறைகளும் வளர்ச்சி கண்டுள்ளன. வங்கிக் கடன் பெறுவதில் இளைஞர்களுக்கு முன்பு பல்வேறு சிக்கல்கள் இருந்தன.
நான் பிரதமரான பிறகு முத்ரா திட்டத்தின்கீழ் இளைஞர்களின் வங்கிக் கடனுக்கு உத்தரவாதம் அளித்தேன். எனது மூன்றாவது ஆட்சிக் காலத்தில், இத்திட்டத்தின் கடன் உச்சவரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.