ஆம்னி பேருந்து ஓட்டுநரை கட்டிவைத்து தாக்கிய விவகாரம் - பேருந்து உரிமையாளர் மீது வழக்கு பதிவு!
மதுரையில் ஆம்னி பேருந்து ஒட்டுநரை கட்டி வைத்து அடித்து சித்திரவதை செய்த
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ஆம்னி பேருந்தில் ஓட்டுநராக
பணியாற்றி வருபவரை கட்டிவைத்து சித்திரவதை செய்யப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. ஆம்னி பேருந்து நிறுவனத்திற்கு தெரியாமல் ஒட்டுநர் பயணிகளை ஏற்றி பணம் பெற்றதாக கூறப்பட்டது.
இந்நிலையில், ராமநாதபுரம் திருவாடனை நீர்குன்றம் கிராமத்தை சேர்ந்த பாலகருப்பையா என்ற ஆம்னி பேருந்து ஒட்டுனர் 23 ஆம் தேதி இரவு மதுரை மாட்டுத்தாவணிக்கு பேருந்தை ஓட்டி வந்தபோது மாற்று ஓட்டுநர் ஒருவரை அனுப்பி விட்டு பாலகருப்பையாவை RPT ஆம்னி பேருந்து உரிமையாளர் ராஜசேகர் அழைத்ததாக தெரிகிறது. அப்போது பாலகருப்பையாவை டிக்கெட் ஏற்றிய பணத்தை எடுத்து விட்டதாக கூறி RPT டிராவல்ஸ் அலுவலகத்தில் உள்ளே ராஜசேகர் மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் கையை கட்டிப்போட்டு அடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இதையடுத்து, கைகள் வலிக்குது கைகளை அவிழ்த்து விடுங்கள் என ஒட்டுநர் கதறி அழுதும் ஓட்டுநரை ஆம்னி பேருந்து தாக்குதல் நடத்துபவர்கள் விடவில்லை. இது தொடர்பான தாக்குதல் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. வீடியோவை ஆதாரமாக வைத்து மனித உரிமை ஆணையமும், தமிழ்நாடு காவல்துறையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படியுங்கள் : இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை - பொது சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் இன்று தொடக்கம்!
இந்த வீடியோவை அலுவலகத்தில் உள்ள நபர்களே பதிவு செய்து அதனை அனைத்து ஆம்னி பேருந்துகள் ஓட்டுநர்கள் உள்ள வாட்சப் குழுமத்தில் பதிவிட்டு, அதில் இந்த ஓட்டுநரை யாரும் பணிக்கு சேர்க்கக்கூடாது எனவும் யாரும் இது போல் செய்தால் இது தான் தண்டனை எனவும் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. ஓட்டுநர் பாலகருப்பையா மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் கீழ் RPT டிராவல்ஸ் உரிமையாளர் ராஜசேகர் மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.