மகனின் ஆபாச வீடியோ விவகாரம்: ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!
இதனையடுத்து 25 வயதான பெண் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரது வீட்டில் வேலை செய்த 48 வயதான பெண்ணும் புகார் அளித்ததால் பிரஜ்வல் மீதும், அவரது தந்தை ரேவண்ணா மீதும் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே ஆபாச வீடியோக்கள் வெளியான அன்றே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனி சென்றதாக சொல்லப்படுகிறது. பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள நிலையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. எனினும், அவர் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே, குற்றச்சாட்டை முன்வைத்த பெண்ணை கடத்தியதாக கே.ஆர் நகர் காவல் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை ஹெச்.டி.ரேவண்ணா மீது கடத்தப்பட்ட பெண்ணின் மகன் புகார் அளித்தார். இதனை அடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்ணைக் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் ஹெச்.டி.ரேவண்ணா மீது வெள்ளிக்கிழமை மைசூரு கே.ஆர். நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் வேலையில் இருந்து நின்றுவிட்டார். இந்த நிலையில், கடந்த ஏப்.26-ம் தேதி ஹெச்.டி.ரேவண்ணாவின் நெருங்கிய உதவியாளர் சதீஸ் தனது தாயாரை அழைத்துச் சென்றதாகவும், அதேநாளில் அவர் வீட்டுக்கு வந்து விட்டார். ஆனால் ஹெச்.டி.ரேவண்ணாவின் ஆள் மீண்டும் ஏப்.29-ல் தாயை அழைத்துச் சென்றார். அதன்பிறகு தனது தாயார் வீடு வந்து சேரவில்லை என்று கடத்தப்பட்ட பெண்ணின் மகன் குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து, கடத்தப்பட்ட பெண்ணை சிறப்பு புலனாய்வு குழுவினர் கண்டுபிடித்தனர்.
இதனிடையே, இந்த பெண் கடத்தல் வழக்கில் கைது செய்யப்படுவதில் இருந்து இடைக்காலத் தடை கோரி ரேவண்ணா தாக்கல் செய்திருந்த மனுவை உள்ளூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் தேவகவுடா வீட்டில் வைத்து அவரது மகனும், பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையுமான ரேவண்ணா சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ரேவண்ணாவுக்கு நேற்று (மே 7) மாலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அவர் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய முக்கிய உறுப்புகள் சீராக இருக்கின்றன எனத் தெரிவித்தனர். அதன்பின்னர், சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகளுடன் அவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.