இனி இதற்கு (₹) பதில் (ரூ) இது... தமிழ்நாடு பட்ஜெட் விளம்பரத்தில் 'ரூ' இலச்சினை!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் நாளை (மார்.14) தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நாளை தாக்கல் செய்கிறார்.
இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரியில் நடந்தது. தொடர்ந்து நாளை சட்டப்பேரவை கூடுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு, பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.
தமிழ்நாடு அரசின் 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் விளம்பரத்தில் இந்தியா ரூபாயின் குறியீடுக்கு (₹) பதிலாக 'ரூ' இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த விளம்பரத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' என்கிற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
மும்மொழிக் கொள்கை தொடர்பாக சர்ச்சை தலை தூக்கியுள்ள நிலையில் இந்தாண்டு ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள 15 அலுவலக மொழிகளின் ஒன்றான தமிழ் மொழியை முதலமைச்சர் ஸ்டாலின்ஃ உபயோகித்து உள்ளார்.