“வெறும் வெற்று அறிவிப்புகள்” - பட்ஜெட் குறித்து இபிஎஸ் விமர்சனம்!
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (மார்ச் 14) 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சுமார் 2.33 மணி நேரம் பட்ஜெட் உரையாற்றிய அவர், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள், துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரம் உள்ளிட்டவைகளை அறிவித்தார். இதனிடையே டாஸ்மாக்கில் 1000 ரூபாய் கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்ததை வைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்தார். அப்போது அவர் பேசியதாகவது, “திமுக ஆட்சி தொடங்கி ஐந்தாம் ஆண்டாக நிதிநிலை தாக்கல் செய்துள்ளனர். இது வரை புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. கடந்த பட்ஜெட்டில் திமுக சார்பாக 525 அறிவிப்புகள் வெளியிட்டார்கள். அதில் 15 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை.
நீட் தேர்வு ரத்து செய்ய ரகசியம் இருக்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதி சொன்னார். அது ரத்து செய்யப்படவில்லை அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் இடம் பெறவில்லை. கல்விக்கடன் ரத்து என அறிவிக்கப்படவில்லை. 100நாள் வேலை 150 நாட்களாக மாறும் என அறித்தார்கள் அதுவும் நிறைவேற்றவில்லை.
சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் 100 ருபாய் என சொன்னது அறிவிக்கப்படவில்லை. 5 ரூபாய் விலை பெட்ரோலுக்கு குறைப்போம் என சொல்லி 3 ரூபாய் தான் குறைத்துள்ளனர். ரேசன் கடையில் சர்க்கரை ஒரு கிலோ கூடுதல் என்று அறிவிக்கப்படவில்லை ஸ்டாலின் அறிவிக்கும் குழுக்கள் நிலை என்ன என்று இதுவரை தெரியவில்லை
முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் தங்களை விளம்பரப்படுத்த நினைக்கின்றனர். மக்கள் பிரச்சனைக்காக இயங்கவில்லை. கடன் வாங்குவதில் சளைத்தவர் அல்ல என்று முதலமைச்சர் நிரூபித்துக்கொண்டிருக்கிறார். 2500000 இலட்சம் பட்டாக்களை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். வெறும் வெற்று அறிவிப்புகளை தான் பார்க்க முடிகிறது”
இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.