அனைத்து காஷ்மீர் மக்களும் பயங்கரவாதிகள் அல்ல - உமர் அப்துல்லா
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் தேதி, மாலையில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதனால் அருகில் இருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இதில் 12 பேர் பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், குண்டு வெடிப்பிற்கு காரணமான காரை டாக்டர் உமர் முகமது என்பவர் ஓட்டி வந்ததாகவும், இந்த உமர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புலவாமாவை சேர்ந்தவர் என்பதும் தெரிவந்துள்ளது. அத்துடன் இவ்வழக்கில் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா எல்லா கார்மீரிகளும் பயங்கரவாதிகள் அல்ல என்று பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியது, "டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. அப்பாவிகள் இவ்வளவு கொடூரமாக கொல்லப்படுவதை நியாயப்படுத்த முடியாது. குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். ஆனால் விசாரணையில் அப்பாவி மக்களை இழுக்கக்கூடாது.
ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் எல்லா மக்களும் பயங்கரவாதியாகவோ அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவராகவோ இல்லை. இது போன்ற பொதுமைப்படுத்தல்கள் மக்களை சரியான பாதையில் வைத்திருப்பதை கடினமாக்குகின்றன. இப்பகுதியில் அமைதியையும் சகோதரத்துவத்தையும் சீரழிப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே”என்று தெரிவித்தார்.