திமுக கூட்டணியில் இருந்து எந்தக் கட்சியும் வெளியேறாது; கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேச்சு!
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் இன்று நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பில், நாமக்கல் மாவட்டத்தின் பிரதான தொழிலான விசைத்தறித் தொழிலாளர்களின் அவலநிலை குறித்து பேசினார்.
விசைத்தறித் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடி குறித்து தெரிவித்தார். நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறியை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளனர். மைக்ரோ பைனான்ஸ் போன்ற நிதி நிறுவனங்களில் கடன் பெற்று திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், சிலர் கிட்னியை விற்கும் அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றனர், என கூறினார்.
இந்நிலையில் இதற்குத் தீர்வாக, விசைத்தறித் தொழிலாளர்களுக்கு வட்டி இல்லாத கடன் வழங்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்புத் திட்டங்களை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் ஈஸ்வரன் வலியுறுத்தினார்.
மேலும், தொழிலாளர்களின் பிரச்சினைகளைக் களைய ஒரு தனி குழுவை அரசு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். சிறுநீரக விற்பனையில் ஈடுபட்ட இடைத்தரகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கிட்னி விற்பனையில் ஈடுபட்ட இடைத்தரகர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்தார்.
இதனனை தொடர்ந்து, வெற்றிக் கூட்டணியாக உள்ள திமுக கூட்டணியில் இருந்து எந்தக் கட்சியும் வெளியேறாது, என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், எதிர்க்கட்சித் தலைவர் செல்லும் இடங்களில் கூட்டம் சேருவதற்கு ஆச்சரியப்பட எதும் இல்லை, என்றார்.
விசிக தலைவர் திருமாவளனை எடப்பாடி பழனிசாமி ஏன் கூட்டணிக்கு அழைக்கிறார் என்பது தனக்குப் புரியவில்லை என்றும் ஈஸ்வரன் குறிப்பிட்டார்.
நடைபெற உள்ள தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தனது வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் தெரிவித்தார்.