”தேசிய ஜனநாயக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது” - எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இச்சந்திப்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களையும் சந்தித்து வருகிறார். அந்த வகையில், இன்று ஒரத்தநாடு, பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்திக்கிறார். முதல் சந்திப்பாக ஒரத்தநாடு தொகுதிக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
”அதிமுக ஆட்சியில் நிறைய திட்டங்கள் கொண்டுவந்தோம்.
இரண்டுமுறை பயிர்க்கடன் தள்ளுபடி, கடைமடை வரை தண்ணீர் போக நடவடிக்கை, குடிமராமத்து திட்டம், ஏரி ஆழமாச்சு, வண்டல் மண் இயற்கை உரமாச்சு. விளைச்சல்கொடுத்தது. நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. நதியின் குறுக்கே தடுப்பணைகள்என்று நீர் மேலாண்மையில் அதிமுக சிறப்பாகச் செயல்பட்டது” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “திமுக ஆட்சியில் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது மீத்தேன் திட்டத்துக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார், நான் முதல்வராக இருந்தபோது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டம் இயற்றினோம். நிலங்களைப் பாதுகாத்தோம்” என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து அவர், “மேகதாது அணை கட்டிவிட்டால் டெல்டா பாலைவனம் ஆகிவிடும். காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தது மக்களவையை 22 நாட்கள் அவையை ஒத்திவைச்சோம். ஆனால் 39 எம்பிக்களை வைத்துள்ள திமுக ஏன் குரல் கொடுக்கவில்லை..? என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், ”ஏதாவது குழப்பம் ஏற்படுத்தி தேசிய ஜனநாயக கூட்டணியை உடைக்கப் பார்க்கிறார்கள் என்றும் ஆனால் யாராலும் உடைக்க முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியானது வலிமையான வெற்றிக்கூட்டணி. அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்றும் தெரிவித்தார்.