For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘இனி பிரச்சாரங்களில் ஈடுபடமாட்டேன்’ - ஜே.பி. நட்டாவுக்கு நடிகை குஷ்பு கடிதம்!

04:38 PM Apr 07, 2024 IST | Web Editor
‘இனி பிரச்சாரங்களில் ஈடுபடமாட்டேன்’   ஜே பி  நட்டாவுக்கு நடிகை குஷ்பு கடிதம்
Advertisement

“வரும் நாடாளுமன்ற தேர்தலில் இனி பிரச்சாரம் செய்யமாட்டேன்” என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார். 

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் நடிகை குஷ்புவும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் மருத்துவர்கள் பரிந்துரையால் இனி பிரச்சாரத்தில் ஈடுபடமாட்டேன் என பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு பாஜக தேசிய செயற்குழு கமிட்டியின் உறுப்பினரான குஷ்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளதாவது;

நன்றியோடும், சோகத்துடனும் இந்த கடிதம் மூலம் உங்களை அணுகிறேன். வாழ்க்கை என்பது கணிக்க முடியாதது. நாம் நன்றாக இருப்பதாக உணரும்போது சில பிரச்சனைகள் வருகிறது. நானும் அத்தகைய நிலையை எட்டியுள்ளேன். 2019ல் டெல்லியில் துரதிர்ஷ்டவசமாக நடந்த விபத்தில் எனக்கு முதுகின் கீழ்பகுதியில் உள்ள எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த காயம் கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னைத் துன்புறுத்துகிறது. தொடர்ந்து சிகிச்சை எடுத்து கொண்டாலும் குணமடையாத நிலையில் இருக்கிறேன்.

இத்தகைய சூழலில் பிரசாரம் செய்ய வேண்டாம் என்று எனது மருத்துவக் குழு கண்டிப்புடன் அறிவுறுத்தியது. பிரசாரம் செய்தால் உடல்நிலை இன்னும் மோசமாகும் எனவும் எச்சரித்தனர். ஆனால் அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஒரு பாஜகவின் தொண்டராகவும், பிரதமர் மோடியை பின்பற்றும் நபராகவும் கட்சியின் போர்வீரர் என்ற முறையில் டாக்டர்கள் அறிவுரைக்கு எதிராக வலி மற்றும் வேதனைகள் இருந்தாலும் என்னால் முடிந்தவரை பிரசாரம் செய்தேன். ஆனால் இப்போது நிலைமை மோசமாகிவிட்டது.

பலகட்ட ஆலோசனைகளை பெற்றேன். இப்போது பிரச்சனையை சரிசெய்ய தேவையான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தினர். இந்த நடவடிக்கை என்பது ஒரு பெரிய அல்லது உயிருக்கு ஆபத்தான செயல்முறை அல்ல. இருப்பினும் கூட தாமதம் செய்ய முடியாத நிலை இருக்கிறது. ஏனென்றால் தாமதம் செய்வது எனது எதிர்கால வாழ்க்கைக்கு பிரச்சனையாக மாறலாம். மேலும் தற்போதைய வழக்கமான செயல்முறைகளை நான் குறைத்து கொண்டேன்.

பிரச்சாரம் என்பது நீண்ட பயணங்கள், நீண்டநேரம் அமர்ந்து இருப்பது உள்ளிட்டவற்றை கொண்டதாக இருக்கும். இந்த 2 விஷயங்களையும் தேர்தல் பிரசாரத்தில் தவிர்க்க முடியாது. இதனால் தற்போதைய தேர்தல் பிரசாரத்தில் என்னால் பங்கேற்க முடியாது என்பதை கணத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன். அதேவேளையில் முக்கியமான இந்த நேரத்தில் கட்சிக்கு என்னால் பங்களிப்பு செய்ய முடியவில்லையே என்ற ஆழ்ந்த மனவருத்தம் உள்ளது.

இருப்பினும் எனது வலைதள பக்கங்கள் மூலம் பாஜகவின் கொள்கை, செயல்திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்வதன் மூலம் பிரசாரத்தின் ஒருபகுதியாக நான் தொடர்ந்து இருப்பேன். உங்களின் ஊக்கம் வலுவாக நான் திரும்பி வருவதற்கான முயற்சிக்கு வலு சேர்க்கிறது. நான் குணமடைந்து விரைவில் திரும்பி வருவேன். மேலும் நம் பிரதமர் தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்" என தெரிவித்துள்ளார். இதன்மூலம் வரும் லோக்சபா தேர்தலில் குஷ்பு பாஜகவுக்காக பிரசாரம் செய்யமாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.

Tags :
Advertisement