சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அதிமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. பேரவைத் தலைவர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில், அதுகுறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று நடைபெற்று வருகின்றது.
தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியவுடன் சட்டப்பேரவையில் இருந்து அப்பாவு வெளியேறினார். துணைத் தலைவர் பிச்சாண்டி அவை நடவடிக்கையை வழிநடத்தி வருகிறார். அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசினார்.
தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனைத்தொடர்ந்து டிவிஷன் வாக்கெடுப்பு நடத்த துணைத் தலைவர் பிச்சாண்டி ஏற்பாடு செய்துள்ளார். இதனால் பேரவையின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டுள்ளன. எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.