“காங்கிரஸுடன் NO கூட்டணி... தனித்தே போட்டி” - அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி!
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், ஜாமினில் வெளிவந்துள்ளார். ஜாமினில் வெளிவந்தாலும் முதலமைச்சர் அலுவலகம் செல்லக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து தனது முதலமைச்சர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். தொடர்ந்து அதிஷி டெல்லி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனிடையே விரைவில் டெல்லிக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போது பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;
“டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும். கூட்டணி அமைத்து போட்டியிடாது. சட்டம், ஒழுங்கு பிரச்சனையை நான் எழுப்பிய பிறகு அமித்ஷா ஏதாவது நடவடிக்கை எடுப்பார் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், அதற்கு பதிலாக எனது பாதயாத்திரையின் போதே நான் தாக்கப்பட்டேன்” என தெரிவித்தார்.
கடந்த மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் கூட்டணி வைத்து போட்டியிட்டன. ஆனால் பாஜக அனைத்து இடங்களிலும் வெற்றிப் பெற்றது. அதுபோல பஞ்சாப் சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸுடன் கூட்டணி வைக்காமல், ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிட்டது.
ஆம் ஆத்மி கட்சி தற்போது எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் உள்ளது. இதனால் வரும் தேர்தலில் காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சி இணைந்து டெல்லியில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கூட்டணி இல்லை என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.