ஒரே விமானத்தில் எதிரெதிர் கூட்டத்தில் பங்கேற்க பயணித்த நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ்!
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்கேற்கு நிதீஷ் குமாரும், INDIA கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்க தேஜஸ்வியும் ஒரே விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டனர்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இதையும் படியுங்கள் : “தமிழ்நாடு மக்களுக்கு நன்றி” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்நிலையில், இன்று டெல்லியில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. அதேபோல, INDIA கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி கூட்டியிருக்கிறது.
இதற்கிடையே, வெவ்வேறு கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிதிஷ்குமார் மற்றும் INDIA கூட்டணியின் தேஜஸ்வி யாதவ் ஆகிய இருவரும் ஒரே விமானத்தில், அதிலும் குறிப்பாக அடுத்தடுத்த இருக்கையில் பயணிப்பது பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் இருவரும், டெல்லி புறப்படும் முன், தங்கள் கட்சி எம்.பி., எம்எல்ஏக்களிடம் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.