பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் : 6 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பு!
மத்திய பட்ஜெட்டில் எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குப் பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறி, நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 6 மாநில முதலமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.
டெல்லியில் இன்று ( ஜூலை 27 ) நடைபெறும் “நிதி ஆயோக்” ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில், அனைத்து மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் கவர்னர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், 2047க்குள் நாட்டை வளர்ந்த பொருளாதாரமாக மாற்றுவது, MSMEகள், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள், இணக்கங்களைக் குறைத்தல், பெண்கள் அதிகாரமளித்தல், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, வளர்ச்சி மற்றும் சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என தகவல் வெளியானது.
இதனிடையே நாடாளுமன்றத்தில் கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து, பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நிதி ஆயோக் கூட்டத்தை இந்தியா கூட்டணி தலைவர்கள் புறக்கணிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : 100 கோடியைத் தாண்டிய மொபைல் நெட்வொர்க் மாற்றுவதற்கான கோரிக்கை! – டிராய் தகவல்!
இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளபோவதில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அவரை தொடர்ந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, இமாச்சலபிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சுகு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்டோரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.