நியூஸ் 7 தமிழ் பெயரில் போலி கார்டை வாட்ஸ்ஆப் கணக்கில் வைத்து முதலமைச்சர் குறித்து அவதூறு! முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ் மீது வழக்குப்பதிவு!
நியூஸ் 7 தமிழ் பெயரில் போலி கார்டை வாட்ஸ்ஆப் கணக்கில் வைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பிய புகாரில் ஓய்வு பெற்ற டிஜிபியும், அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவுமான ஆர்.நடராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்துக்களின் ஓட்டு எங்களுக்கு வேண்டாம். இந்து ஓட்டுக்கள் இல்லாமலே நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக அவர் பெயரிலேயே அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.நடராஜ் பதிவு செய்திருந்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞர் அணியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் தேவையில்லாத பிரசாரங்களை செய்கின்றனர். ஓய்வு பெற்ற உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் அவரது சொந்த வாட்ஸ்அப் கணக்கில் ஒரு தகவலை பதிவு செய்துள்ளார். அவரின் பெயரை இங்கு குறிப்பிட விரும்பவில்லை, அவர் மீது இன்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ஓய்வு பெற்ற டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவருமான ஆர்.நடராஜ் மீது திருச்சி திமுக மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணியினர், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து, ஆர்.நடராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.