For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சீனாவில் பரவும் புதிய வைரஸ் - இந்தியாவில் கண்காணிப்பு தீவிரம்!

01:20 PM Jan 04, 2025 IST | Web Editor
சீனாவில் பரவும் புதிய வைரஸ்   இந்தியாவில் கண்காணிப்பு தீவிரம்
Advertisement

இந்தியாவில் சுவாசத் தொற்றுகளை தடுக்கும் வகையில் பொதுவான முன்னெச்சரிக்கை வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவியது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்தியதோடு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். தற்போது இதன் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும் முழுமையாக நீங்கவில்லை. இதனிடையே சீனாவில் புதிதாக ஒரு வைரஸ் வேகமாக பரவி வருவதாக வெளியாகியிருக்கும் தகவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹியூமன் மெடப்னியுமோவைரஸ் (Human Metapneumovirus) என்று பெயரிடப்பட்டுள்ள புதிய வைரஸை சுருக்கமாக ஹெச்.எம்.பி.வி என அழைக்கப்படுகிறது.

இந்த வைரஸ் சீனாவில் தற்போது அதிக அளவில் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. எச்.எம்.பி.வி. தொற்று பாதிப்பால் சீனாவில் உள்ள மருத்துமனைகளில் ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்ட்டுள்ளதாகவும், உயிரிழப்பு அதிகரித்துள்ளதன் காரணமாக மயானங்களில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகியுள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் இந்த எச்.எம்.பி.வி. தொற்று பரவி உள்ளதா என்பது குறித்து மத்திய சுகாதாரப் பணிகள் தலைமை இயக்குநர் அதுல் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது, எச்.எம்.பி.வி. தொற்று என்பது சாதாரண சளியை ஏற்படுத்தும் பிற வைரஸ் போன்றதே. இது இளம்வயதினர் மற்றும் முதியோருக்கு காய்ச்சல், தொண்டை வலி, உடல்வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக் கூடும். சீனாவில் எச்.எம்.பி.வி வைரஸ் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இந்தியாவில் சுவாசத் தொற்றுகள் மற்றும் பருவகால புளூ காய்ச்சல் பாதிப்புகளை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.

கடந்த டிசம்பர் மாத தரவுகளின்படி, பாதிப்பு எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பு இல்லை. தற்போதைய சூழலில் யாரும் அச்சப்பட தேவையில்லை. பொதுவாக குளிர்காலங்களில் சுவாசத் தொற்று அதிகரிக்கும் என்பதால், மத்திய அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் மற்றும் படுக்கை வசதிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் சுவாசத் தொற்றுகளை தடுக்கும் வகையில் பொதுவான முன்னெச்சரிக்கை வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement