"புதிய வரிகளால் தமிழ்நாட்டில் 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு" - செல்வப்பெருந்தகை!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த பதிவில், "அமெரிக்கா சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக அறிவித்துள்ள புதிய வரிக் கொள்கையால் நாடு முழுவதும் ஏராளமான தொழில், வர்த்தக துறைகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாடு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நெய்தல், தோல், விவசாயம், கடலுணவு உள்ளிட்ட பல முக்கிய துறைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையில் இருந்தன. இப்போது அந்த ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் காரணமாக தமிழ்நாட்டின் கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது மிகுந்த கவலைக்குரியது.
இந்தியாவின் பொருளாதார நலனை காப்பதில் மத்திய அரசு முழுமையாக தோல்வியடைந்துள்ளது. அமெரிக்கா எடுத்துள்ள முடிவை எதிர்த்து வலுவான நடவடிக்கைகளை எடுக்காமல் அமைதியாக அமர்ந்து கொண்டிருப்பது, தமிழநாட்டின் உழைப்பாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நலனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருந்தும், அதனை நிறைவேற்றாமல் மௌனம் காப்பது மிகவும் கவலையளிக்கிறது.
எனவே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், அமெரிக்காவின் இந்த அநீதி நிறைந்த வரிக் கொள்கையையும், அதற்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கைகட்டி நின்று கொண்டிருக்கும் மத்திய அரசையும் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
தமிழ்நாட்டு மக்களின் உழைப்பும், வாழ்வாதாரமும் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு உடனடியாக வலுவான தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.