நாடாளுமன்றத்தில் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்!
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
மக்களவையில் (டிச.13) புதன்கிழமை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதே போன்று புகைக் குப்பிகளை வீசி பெண் உள்பட இருவர் தாக்குதல் நடத்தினர். இவர்கள் 4 பேரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்து டெல்லி போலீஸிடம் ஒப்படைந்தனர்.
நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாடாளுமன்றம் மீதான பயங்கரவாதத் தாக்குதலின் 22-ம் ஆண்டு நினைவு தினத்தில் நடந்த இந்தத் தாக்குதல் திட்டத்தை 6 நண்பர்கள் இணைந்து செயல்படுத்தியது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்கள் : அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் செலுத்தலாம் – மின்வாரியம் அறிவிப்பு!
பல கட்ட சோதனைகளை தாண்டி மக்களவைக்குள் புகைக் குப்பிகளை இருவர் கொண்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை வலுப்படுத்த எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா சில உத்தரவுகளை வெளியிட்டுள்ளார்.
இன்று முதல் மறுஅறிவிப்பு வரும் வரை பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பார்வையாளர் மாடத்தில் இருந்து அவைக்குள் குதிப்பதை தடுக்கும் வகையில் கண்ணாடி தடுப்புகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதன்மை வாயிலில் எம்.பி.க்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தனி வாயிலில் அனுமதிக்கப்பட உள்ளனர்.
மத்திய அமைச்சர்களை தவிர, பிற எம்பிக்களின் உதவியாளர்கள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் வருவதற்கு இனி அனுமதி இல்லை என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், விமான நிலையங்களில் இருப்பது போன்று முழு உடலை ஸ்கேன் செய்யும் அதி நவீன இயந்திரங்களை நாடாளுமன்றத்தின் அனைத்து வாயில்களிலும் பொறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.