புதிய குற்றவியல் சட்டம் | டெல்லியில் பதியப்பட்ட முதல் வழக்கு! யார் மீது தெரியுமா?
புதிய குற்றவியல் சட்டத்தின்கீழ் முதல் வழக்கு டெல்லியில் சாலையோர வியாபாரிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது.
இன்று முதல், அதாவது ஜூலை 1 முதல், நாட்டில் குற்றம் மற்றும் நீதிக்கான புதிய சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இப்போது குற்றச் சம்பவங்களின் எஃப்ஐஆர்கள் புதிய சட்டத்தின்படி பதிவு செய்யப்படும். மேலும் புதிய சட்டத்தின் அடிப்படையில் வழக்குகளும் நடத்தப்படும். பிரிட்டிஷ் காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ் இப்போது எப்ஐஆர் பதிவு செய்யப்படாது. 20-அத்தியாயங்கள் கொண்ட இந்திய நீதித்துறை சட்டத்தில் 358 பிரிவுகள் உள்ளன, அதேசமயம் பழைய சட்டம் அதாவது ஐபிசி 1860ல் 511 பிரிவுகள் உள்ளன.
இந்திய நீதித்துறை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்ய டெல்லி காவல் நிலையங்களில் ஏற்கனவே ஒத்திகை செய்யப்பட்டது. புதிய சட்டத்தின் கீழ் போலீசார் தங்கள் புகாரை எடுக்கவில்லை, எப்ஐஆர் பதிவு செய்யவில்லை என்று மக்கள் புகார் அளித்து வந்தனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் வாட்ஸ்அப்பில் கூட புகார் அனுப்பினால், போலீசார் புகாரை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனுடன், புதிய சட்டத்தின் கீழ் ஆன் லைனில் சாட்சியம் அளிக்கும் வசதியும் இருக்கும். இதனால், மக்கள் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என இந்த புதிய சட்டம் கூறுகிறது.
இந்நிலையில், புதிய குற்றவியல் சட்டத்தின்கீழ் முதல் வழக்கு டெல்லியில் சாலையோர வியாபாரிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது.
பங்கஜ் ராய் என்பவர் புதுடெல்லி ரயில் நிலையம் அருகே உள்ள டீலக்ஸ் டாய்லெட் அருகே சாலையோரத்தில் பீடி சிகரெட் கடையை அமைத்திருந்தார். போலீசார் கேட்டும் கூட பங்கஜ் ராய் கடையை அகற்றவில்லை. சாலையில் கடை இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாகச் சென்றவர்களிடம், கடைக்காரர் மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்குமாறு கார்த்திக் மீனா என்பவர் கேட்டுக்கொண்டார். ஆனால் வேலையாக இருந்ததால், யாரும் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, கார்த்திக் மீனா தானே புகார் ஆளித்ததன்பேரில், பங்கஜ் ராய் மீது போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்தார்.