நீட் தேர்வை திரும்பப் பெறும் நாள் விரைவில் வரும் - ராகுல் காந்தி எம்.பி.!
நீட் தேர்வு என்பது பணக்கார மாணவர்களுக்கானது எனவும், விவசாய சட்டங்களை திரும்ப பெற்றது போல் நீட் தேர்வும் திரும்ப பெறும் நாள் விரைவில் வரும் எனவும் ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார்.
இன்று காலை மக்களவை கூடியதும் மறைந்த முன்னாள் எம்பிக்கள் கணேசமூர்த்தி உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். ஆனால் இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராகுல் காந்தியின் மைக் துண்டிக்கப்பட்டதைக் கண்டித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் முழக்கமிட்டனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. இதனையடுத்து மக்களவை நடவடிக்கைகளை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். பின்னர் பகல் 12 மணிக்கு மக்களவை கூடிய போதும் நீட் தேர்வு மோசடிகள் குறித்து விவாதிக்க சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். இதனால், இந்தியா கூட்டணி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். இதனையடுத்து மக்களவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:
“நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசுடன் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த விரும்புகிறது. நீட் விவகாரம் தொடர்பாக விவாதம் வேண்டும் என இந்தியா கூட்டணி சார்பில் கோரிக்கை வைத்தோம். ரூ.25 லட்சத்திற்கு வினாத்தாள் விற்கப்படும் அவலம் உள்ளது.
மாணவர்கள் நாடு முழுவதும் போராடி வருகின்றனர். அதனை ஒடுக்கும் வேலையில் மத்திய அரசு செய்து வருகிறது. நீட் முறைகேடு என்பது மிக மிக முக்கியமான பிரச்னை. அதனை அனைவரும் விவாதிக்க வேண்டும். எதிர்கட்சிகளில் குரல் ஒடுக்கப்படுகிறது. நீட் தேர்வில் தமிழ்நாட்டில் 17க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நீட் தேர்வு என்பது பணக்கார மாணவர்களுக்கானது.
படிக்காமல் குறுக்கு வழியில் ரூ. 25 லட்சம் கொடுத்து வினாத்தாளை வாங்கி மருத்துவராக முடியும் என்பதை காட்டிக்கொடுத்துள்ளது. அவ்வாறு வரும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறும் மக்களின் நிலை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். விவசாய சட்டங்களை திரும்ப பெற்றது போல் நீட் தேர்வும் திரும்ப பெறும் நாள் விரைவில் வரும்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசியுள்ளார்.