நீட் முறைகேடு விவகாரம் – பீகாரில் மேலும் இருவர் கைது!
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகாரில் மேலும் இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நிகழாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாக பல புகார்கள் எழுந்தன. வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.
இந்த புகார் தொடர்பாக பீகாரில் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து சிபிஜ விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பாட்னாவில் இரண்டு பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைதை தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, தேர்வுக்கு முன்னர் குறிப்பிட்ட மாணவர்களுக்கு வினாத்தாள் மற்றும் அவற்றிற்கான விடைகளை இருவரும் அளித்ததாக சிபிஐ தெரிவித்தது. இதனையடுத்து ஜார்கண்டைச் சேர்ந்த இருவரை சிபிஐ சமீபத்தில் கைது செய்தது.
ஹசாரியாக் நகரில் உள்ள ஒயாசிஸ் பள்ளி முதல்வர் எசான்உல் ஹக், துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தேசிய தேர்வு முகமையில் நகர ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர்கள் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் ஜமாலுதீன் என்ற பத்திரிகையாளரை சிபிஐ கடந்த 29ம் தேதி கைது செய்தது. ஜமாலுதீன் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஒயாசிஸ் பள்ளி முதல்வர் எசான்உல் ஹக், துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோருக்கு உதவியதாக கூறி கைது செய்யப்பட்டார்.
மேலும், குஜராத்தில் உள்ள கோத்ரா, கோட்டா, ஆனந்த், அகமதாபாத் உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ சோதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து பீகாரில் நேற்று (ஜுலை 8) இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மேலும் இருவரை சிபிஐ அதிகாரிகள் இன்று (ஜுலை 9) கைது செய்தனர். பீகாரின் நாளந்தா பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் மற்றும் கயாவில் இருந்து சன்னி ஆகிய இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இதில் சன்னி குமார் என்பவர் போட்டித் தேர்வாளர். ரஞ்சித் குமார் என்பவர் சன்னி குமாரின் தந்தையாவார். இதன்மூலம் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.