For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நீட் விலக்கு | தமிழ்நாடு சட்டப்பேரவையில், தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

11:46 AM Jun 28, 2024 IST | Web Editor
நீட் விலக்கு   தமிழ்நாடு சட்டப்பேரவையில்  தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
Advertisement

நீட் விலக்கு சட்ட முன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

Advertisement

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்ட நீட் மற்றும் நெட் நுழைவுத் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசைக் கோரி,  நேற்று கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்நிலையில்,  இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு அவ்வப்போது முன்னெடுத்து வருகிறது.  அதே, வேளையில்,  அண்மையில் நிகழ்ந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு,  கருணை மதிப்பெண்கள் உள்ளிட்ட முறைகேடுகள் இந்தியா முழுக்க நீட் தேர்வு பற்றிய சலசலப்பை அதிகப்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பையும் உருவாகியுள்ளது.

Image

இந்நிலையில்,  இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.  அப்போது அவர் பேசியதாவது:

மத்திய அரசு  2017-ம் ஆண்டு நீட் தேர்வை  கட்டாயமாக்கியது.  நீட் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து எதிர்த்து வருகிறோம்.  நீட் விவகாரத்தில் அரசியல் கட்சிகளிடையே கருத்து ஒற்றுமை நிலவி வருகிறது.  மருத்துவ துறையிலும் சுகாதார குறியீடுகளிலும் நாட்டிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாடு உள்ளது.  முனைவர் அனந்த கிருஷ்ணன் பரிந்துரையின்பேரில் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய அடித்தளமிட்டவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கிய நிலையில் மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கு எட்டாக்கனியாகி விட்டது.  நீட் தேர்வு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் அண்மைக்காலமாக எழுந்து வருகின்றன.  நீட் தேர்வுக்கு பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.  அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் அரங்கேறிய சம்பவங்கள் மாணவர்களின் நம்பிக்கையை நிலை குலையச் செய்துள்ளன.  நீட் தேர்வு முறைகேடுகளால் பல ஆண்டுகாலம் உழைத்த மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல் இந்தியாவின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து,  தனித்தீர்மானத்தை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்,  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன்,  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆளுர் ஷா நவாஸ்,  பாமக சார்பில் ஜி.கே.மணி ஆகியோர் பேசினர்.  அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  பாஜக கூட்டணியில் இருந்தாலும் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவாக பாமக பேசியதற்கு நன்றி தெரிவித்தார்.

ஆனால்,  நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் கொண்டு வந்த நீட் தேர்வு விலக்கு தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Tags :
Advertisement