விரைவில் ஆன்லைனில் "நீட்" தேர்வா? - மத்திய அமைச்சகம் தீவிர ஆலோசனை!
'நீட்' தேர்வை எழுத்து தேர்வாக நடத்துவதா அல்லது இணைய வழியில் நடத்துவதா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
எம்.பி.பி.எஸ், மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான, 'நீட்' எனப்படும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை இந்த தேர்வுகளை நடத்தி வருகிறது. மருத்துவத் துறையில் நுழைவதற்கான மிக முக்கியமான நுழைவுத்தேர்வாக கருதப்படும் இளநிலை நீட் தேர்வை, நடப்பாண்டில் 24 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வின் போது வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகவும் ,தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, என்.டி.ஏ., நடத்தும் தேர்வுகள் நேர்மையாகவும், வெளிப்படை தன்மையுடனும் நடத்தப்படுவதை உறுதி செய்ய, இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. நுழைவுத் தேர்வு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்த இக்குழு, பல்வேறு சீர்திருத்தங்களை பரிந்துரைத்து மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்; இளநிலை நீட் தேர்வுகளை எழுத்து தேர்வாக நடத்துவதா அல்லது இணைய வழியில் நடத்துவதா என்பது குறித்து தேர்வுகளை நிர்வகிக்கும் மத்திய சுகாதாரத்துறையுடன் விவாதித்து வருகிறோம். இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உடன் இரண்டு சுற்று பேச்சு நடத்தப்பட்டுள்ளது. விரைவில் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டு, 2025 தேர்வில் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படும் என்றார்.
நீட் தேர்வு மட்டுமின்றி, முனைவர் படிப்புக்கான நெட் நுழைவுத் தேர்வு உட்பட அரசுப் பணிகளில் சேர்வதற்கான பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் என்.டி.ஏ., நடத்துகிறது. ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், சில முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. அதன்படி, 2025 முதல், உயர் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை மட்டும் இனி என்.டி.ஏ. நடத்தும். மேலும், தேர்வுகளின் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக என்.டி.ஏ., செயல்பாட்டில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், புதிதாக 10 புதிய பணியிடங்கள் இதற்காக உருவாக்கப்பட உள்ளதாக கூறினார்.