For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மார்ச் 10-ல் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் - நாடு முழுவதும் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு!

05:28 PM Mar 03, 2024 IST | Web Editor
மார்ச் 10 ல் மாபெரும் ரயில் மறியல் போராட்டம்   நாடு முழுவதும் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு
Advertisement

நாடு முழுவதும் மார்ச் 10 ஆம் தேதி மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக விவசாய சங்கம் அறிவித்துள்ளது.

Advertisement

வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருநூறுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், கடந்த 13 ஆம் தேதி டெல்லியை நோக்கி செல்லும் பேரணியை தொடங்கின. இதன் காரணமாக அந்த பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இதில் சில விவசாயிகளும் உயிரிழந்தனர்.

மத்திய அரசுடன் நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மீண்டும் விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்தனர். இதனையடுத்து டெல்லி நோக்கி முன்னேறிய விவசாயிகள் மீது போலீசார் சரமாரி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தடைகளை மீறி முன்னேறிச் சென்ற விவசாயிகளை போலீசாரும்,  துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தினர். போலிசார் நடத்திய தாக்குதலில் இளம் விவசாயியான சுப்கரன் சிங் உயிரிழந்தார்.இதன் காரணமாக போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது FIR பதிவு செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தியிருந்தனர். அவர் இறந்து 9 நாட்களுக்குப் பிறகு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. சுப்கரன் சிங்கின் உடற்கூராய்வின்போது, அவர் தலைக்குள் உலோகத்திலான பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விவசாயிகளின் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர் புகைக்கொண்டு மற்றும் ரப்பர் குண்டுகளை மட்டுமே போலீசார் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.  இருப்பினும் அந்த உலோக துகள்கள் போலீசார் பயன்படுத்தியதா? அல்லது தனிநபர் யாரேனும் பயன்படுத்தியிருக்கிறார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில், விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், “டெல்லி நோக்கிய பேரணி முடிவை திரும்ப பெற போவதில்லை. எல்லையில் விவசாயிகளின் பலத்தை மேலும் அதிகரித்த பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். மார்ச் 6 ஆம் தேதி, பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லி வர உள்ளனர். மார்ச் 10 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement