#NationalFilmAwards | தேசிய விருதுகளை குவித்த பொன்னியின் செல்வன் - 1!
பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் சிறந்த தமிழ் மொழி திரைப்படத்திற்கான தேசிய விருது உள்பட 4 விருதுகளை குவித்துள்ளது.
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி வருகிறது. இதில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி வருகிறது.
இந்நிலையில் 70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (ஆக.16) அறிவிக்கப்பட்டது. இதன்படி இந்த முறை 2022ஆம் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் முதல் பாகம்' (Ponniyin selvan 1) படத்திற்கு சிறந்த தமிழ் மொழி திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதோடு சிறந்த பின்னணி இசையமைப்பு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த ஒளிப்பதிவாளர் ஆகிய பிடிவுகளிலும் தேசிய விருதை வசப்படுத்தி பொன்னியின் செல்வன் பாகம் - 1 திரைப்படக்குழு அசத்தியுள்ளது.
இதன்படி முறையே பொன்னியின் செல்வன் பாகம் - 1 திரைப்படத்தில் சிறந்த பின்னணி இசையமைத்த ஏ.ஆர். ரகுமானும், இத்திரைப்படத்தில் சிறந்த ஒலி வடிவமைப்பு வழங்கிய ஆனந்த் கிருஷ்ண்மூர்த்தியும், சிறந்த ஒளிப்பதிவாளராக ரவி வர்மனும் தேசிய விருதை பெறுகின்றனர்.