என்டிஏ நாடாளுமன்ற குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்வு!
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டன. மக்களவைத் தேர்தல் 2024இன் முடிவுகள் வெளியான நிலையில், பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் பாஜக 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. எனவே, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று (ஜூன் 7) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக, தெலுங்கு தேசம், ஜேடியு, ஜேடிஎஸ் உட்பட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் எம்பிக்களும் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஜி.கே வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற குழுத்தலைவராக ஒருமனதாக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். மத்திய அமைச்சர் அமித்ஷா வழிமொழிந்தார். இக்கூட்டத்திற்கு பின் குடியரசுத் தலைவரை சந்தித்து நரேந்திர மோடி ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.